சாத்தூர், ஆக.18: சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இவர்கள் இருக்கன்குடியில் இருந்து தங்களின் ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்தில் சாத்தூர் வந்து சேர்ந்தனர்.
ஆனால் இரவு சாத்தூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையத்தில் பல மணி நேரம் காத்திருந்தனர். கடந்த ஆண்டுகளில் இருக்கன்குடி மற்றும் சாத்தூரில் இருந்து வெளியூருக்கு சிறப்பு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்கினர். இந்தாண்டு வெளியூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்காததால் பக்தர்கள், பொதுமக்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். எனவே வரும் காலங்களில் சிறப்பு பேருந்துகளை கட்டாயம் இயக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.