விருதுநகர், அக்.17: விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையிலும் 60வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரிசுகளுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே சம்பந்தப்பட்டவர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு-அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் விருதுநகரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விருதுநகர் போக்குவரத்து பணிமனை முன்பு கொட்டும் மழையில் தொடர்ந்து 60வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நல அமைப்பு குழுவின் செயலாளர் போஸ் தலைமை வகித்தார். போராட்டத்தில் மதுரை மாவட்ட சிஐடியு உதவித் தலைவர் இராஜேந்திரன், மாவட்டத் தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். சிஐடியு மாவட்டச செயலாளர் பி.என். தேவா பேசினர்.