சிவகாசி, செப். 15: சிவகாசியில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சிவகாசி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் நாரணாபுரம் ரோட்டில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் சட்டவிரோதமாக பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த செல்வக்குமார்(25) என்பவரை கைது செய்தனர். போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.