விருதுநகர், நவ.12: விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி தொகை ரூ.5 ஆயிரம், அதிகம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம், படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக 142 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
