சாத்தூர், அக்.12: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் திருநெல்வேலி தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து சாத்தூர் நகராட்சி பகுதிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் நகராட்சியால் உள்ள 24 வார்டு பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. சாத்தூர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள பெரியார் நகர், சிதம்பரம் நகர், அண்ணாநகர், கே.கே.நகர் பகுதிக்கு செல்லும் குடிதண்ணீர் பைப் லையனை நான்கு வழிச்சாலையில் கட்ட உள்ள உயர்மட்ட பாலம் கட்டுமாண பணிக்காக குழாய்களை அகற்றினர். குழாய்கள் அகற்றப்பட்டு இருபது நாட்களுக்கும் மேலாகியும் புதிய குழாய் பதிக்கும் பணி மந்தக் கதியில் நடப்பதால் பெரியார் நகர், சிதம்பரம் நகர், கே.கே.நகர் பகுதியில் உள்ள மூவாயிரம் குடியிருப்புகளுக்கு தண்ணீர் விநியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் தண்ணீர் தேவைக்கு, தனியாரிடம் பல ஆயிரங்கள் செலவு செய்து வாங்கி பயண்படுத்தி வருகின்றனர்.
மேலும் தண்ணீர் குழாய் பதிப்பதற்காக ஜே.சி.பி. எந்திரம் மற்றும் ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளில் பள்ளங்களை தோண்டி பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை ஓரங்களில் பெரிய பள்ளங்களை தோண்டி குடிநீர் குழாய்களை பதித்து விட்டு அதை மூடும் போது முறையாக சாலையை சரி செய்யாமல் விட்டு செல்வதால் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் நகராட்சி அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி குடிநீர் குழாய்களை பதிக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், பின்பு குழாய் பதிப்பதற்காக தோண்டப்படும் பள்ளங்களை முறையாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.