ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 7:தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்க்கை, நீக்கத்திற்கு புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் மின்னணு குடும்ப அட்டைகளில் உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சேவையை முறைப்படுத்துவதற்காக மென்பொருளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி குடும்ப அட்டையில் உறுப்பினர் சேர்க்கை, முகவரி மாற்றம், குடும்ப தலைவரின் பெயர் மாற்றம் போன்றவை ஆண்டிற்கு இருமுறை மட்டுமே மேற்கொள்ள முடியும் (ஜனவரி முதல் ஜூன் வரை மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரை) என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிவில் சப்ளை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குடும்ப அட்டைதாரர் விரும்பும் போது இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்து குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப தலைவர் புகைப்படத்தை மாற்றி கொள்ளும் நடைமுறை ஏற்கனவே இருந்தது. ஆனால் தற்போது வரைமுறைப்படுத்தப்பட்டதால் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும். நினைத்த நேரத்தில் செய்ய முடியாது’ என்றார்.
