விருதுநகர், ஆக.6: வெளிநாடுகளில் வேலைக்குச் சென்ற அயலகத்தமிழர் நல வாரிய உறுப்பினர் திடீரென்று மரணம் எய்தும் நிலையில், வறிய நிலையில் உள்ள அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. குடும்பத்தின் முதன்மை பொருளீட்டும் நபரை இழந்து, துன்புறும் அயலகத் தமிழர்களின் குடும்பத்தினருக்கு, நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அயலகத் தமிழர்களின் நலனை உறுதிப்படுத்த, அயலகத் தமிழர் நல வாரியம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது வரை இவ்வாரியத்தில் சுமார் 28 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அயல்நாடுகளில் உயிரிழக்கும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தினர் நிதியுதவி பெற தகுதியுடையவர் ஆவர். அனைத்து வகை இறப்பிற்கும் இத்திட்டம் பொருந்தும்.
உயிரிழந்த நபர் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண்டும்(உறுப்பினர் அட்டை காலாவதியாகாமல் இருக்க வேண்டும்). உயிரிழக்கும் போது அயல்நாட்டில் முறையான ஆவணங்களுடன் பணியில் இருந்திருத்தல் வேண்டும். உரிய ஆவணங்களுடன் அயல்நாட்டில் உறுப்பினர் உயிரிழந்த ஒன்பது மாத காலத்திற்குள் உறுப்பினர் செயலர், அயலகத் தமிழர் நல வாரியம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது அயலக தமிழர் நல வாரியத்தின் வலைதளம் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.