காரியாபட்டி, அக்.4: காரியாபட்டியில் மாடியில் தகர செட் அமைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர். காரியாபட்டியை சேர்ந்தவர்கள் தங்கமணி(19), கனகவேல்(19), கருப்பையா(20). இவர்கள் அச்சம்பட்டி பகுதியில் செல்லபாண்டியன் என்பவரது வீட்டில் மாடிப்பகுதியில் தகர செட் அமைப்பதற்காக வெல்டிங் வேலை பார்த்தனர்.
அப்போது கம்பியை தூக்கிய போது எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்சார கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த தங்கமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த கனகவேல், கருப்பையா ஆகியோர் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.