விருதுநகர், டிச.2: தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது என, கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு அலகு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சியுடன் கூடிய விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கூறுகையில், உலக எய்ட்ஸ் தினம் டிச.1ல் அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டில் உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாக இடையூறுகளை கடந்து எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல் என்பதை மையமாக வைத்து உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நடத்தப்படுகிறது.இந்தியாவிலேயே தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட எச்.ஐ.வி., எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் முன்மாதிரி மாநிலமாக உள்ளது. மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிவகாசி இ.எஸ்.ஐ மருத்துவமனை, மொபைல் நம்பிக்கை மையங்களின் மூலம் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

