மானாமதுரை, டிச. 2: மானாமதுரையில் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார் நகர் மேட்டுத்தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன் சதீஸ்குமார் என்ற பாண்டி (26) நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டில் இருந்தார். அவரை நெப்போலியன் மகன் கிஷோர் என்பவரது பிறந்தநாள் பார்ட்டிக்கு நண்பர்கள் அழைத்திருந்தனர். செட்டிகுளம் ரோட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மணிக்கும், சதீஸ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணி, சதீஸ்குமாரை தலை கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். படுகாயமடைந்த சதீஸ்குமார் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிந்து சதீஸ்குமாரை கொலை செய்த மணியை கைது செய்தனர்.

