விருதுநகர், நவ. 1: தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்கு, ஹஜ் ஆய்வாளர்களாக சேவையாற்ற விரும்புபவர்கள் நவ.3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக ஆய்வாளர்களாக சேவையாற்ற தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள் அல்லது ஒன்றிய, மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக் காலமாக கருதப்படும். இதன் பணிக் காலம் சுமார் இரண்டு மாதங்கள் ஆகும். விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமனமுறை உள்ளிட்டவற்றை www.hajcommittee.gov.in என்ற இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம். விருப்பமுள்ள நபர்கள் நவ.3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
