சிவகாசி, செப். 16: சிவகாசி அருகே மகனை அரிவாளால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் கருத்தப்பாண்டி(42). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குடும்பத்தகராறு காரணமாக மகன் சுதாகருடன்(22) பிரிந்து சென்றுவிட்டார். இந்த நிலையில் சிவகாசி திரும்பிய கருத்தப்பாண்டி, தனது குடும்ப பிரச்சனைக்கு மனைவியின் தம்பி சூரியபிரகாஷ் தான் காரணம் என கோபத்தில் இருந்தார். இந்த நிலையில் நாரணாபுரம் பகுதியில் இவரது மச்சான் சூரியபிரகாஷ், மகன் சுதாகர் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது கருத்தப்பாண்டி தலைமையில் வந்த 5 பேர் கொண்ட கும்பல்
வழிமறித்து அரிவாளுடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் ரத்த காயம் அடைந்த சுதாகர், சூரிய பிரகாஷ் இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மகன் சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் கருத்தப்பாண்டி, சந்தோஷ்குமார், செல்லம்மாள், சந்தியா, கருப்பையா ஆகிய 5 பேர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கருத்தப்பாண்டி, சந்தோஷ் குமார்(26) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இதே சம்பவம் குறித்து கருத்தப்பாண்டி உறவினர் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் சுதாகர், சூரியபிரகாஷ் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.