சிவகாசி, அக்.14: சிவகாசியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அனுப்பன்குளம் பகுதியில் கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு கடையின் அருகில் தகர செட் அமைத்து அதில் உரிய அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அதனை போலீசார் பறிமுதல் செய்து பட்டாசு கடையில் இருந்த அனுப்பன்குளம் காளீஸ்வரன் மனைவி ஜானகி (54) என்பவரை கைது செய்தனர். இதே போல் சாத்தூர் ரோட்டில் மீனம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையின் பின்புறம் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமாக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பட்டாசு கடையில் இருந்த ஜெயச்சந்திரன் (73) என்ற முதியவரை கைது செய்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.