காரியாபட்டி, அக்.14: காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காரியாபட்டி நகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், அரசு மருத்துவமனை போன்ற இடங்களில்கடந்த சில நாட்களாக நாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. இதனால், வெளியில் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. காலை நேரத்தில் பள்ளிக் குழந்தைகள், டூவீலர்களில் பணிக்கு செல்வோர், சாலையில் நடந்து செல்பவர்கள் என அனைவரையும் விரட்டி செல்கின்றன. பகல், இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தும் போது, அவர்கள் விபத்திற்குள்ளாகும் சூழலும் உள்ளது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அகற்ற வேண்டும். நோய் தாக்குதலுக்குள்ளான நாய்களை பிடித்து அவற்றிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.