மானாமதுரை, அக்.29: மானாமதுரையில் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நடந்தது.
மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி சன்னதியில் நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு பால்,சந்தனம், இளநீர், தயிர் உள்ளிட்ட 11 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வெள்ளிகவசம் சார்த்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுப்பிரமணியசுவாமிக்கு மகாதீபராதனை நடந்தது. இதே போல நான்குவழிச்சாலையில் உள்ள வழிவிடுமுருகன் கோயிலிலும், அலங்காரகுளத்தின் அருகே அமைந்துள்ள மயூரநாத முருகன்கோயிலிலும், கால்பிரவு கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியர் கோயிலும், இடைக்காட்டூரில் உள்ள பாலமுருகன் கோயிலிலும் சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளுடன் கந்த சஷ்டி விழா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
