சிவகாசி, செப்.14: சிவகாசி நகர் பகுதிகளில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். சிவகாசி நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலைகளில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் நடமாடுவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கூட்டம், கூட்டமாக படுத்து உறங்கும் மாடுகள் கண்ணுக்கு தெரியாததால், டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி கீழே விழுந்து காயமடைகின்றனர். சில சமயங்களில் பலத்த காயமடைந்து உயிரிழக்கும் சம்பவமும் நடக்கின்றது.
சாலையோரம் உள்ள கழிவுகள், தீவனங்களை மேய்வதற்காக மாடுகள் சாலையில் ஆங்காங்கே குறுக்கும், நெடுக்குமாக திரிகின்றன. மேலும் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களிலும் சுற்றி திரிகின்றன. சிவகாசி நகர் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக சாலையில் மாடுகள் சுற்றிதிரிவது குறைந்துள்ளது. தற்போது மீண்டும் நகர்ப்பகுதிகளின் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. எனவே, சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.