Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வத்திராயிருப்பு பகுதியில் எலுமிச்சை கொள்முதல் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு, டிச. 11: வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள அர்ச்சனாபுரம், புதுப்பட்டி, மீனாட்சிபுரம். கான்சாபுரம், சேஷாபுரம், தாணிப்பாறை, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் விளையக்கூடிய எலுமிச்சைகளை விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது எலுமிச்சை சீசன் ஆரம்பிக்காததால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைவாகவே உள்ளது.

இதனால் எலுமிச்சை கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் எலுமிச்சை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பெய்த தொடர் மழையால் இப்பகுதிகளில் உள்ள தோட்ட கிணறுகளில் போதுமான அளவில் தண்ணீர் உள்ளதால் எலுமிச்சை விவசாயத்தினை செய்து வருகிறோம். கடந்த சீசனில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.60 முதல் ரூ.70 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தோம். கடைகளில் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்று வந்தனர்.

ஆனால் தற்போது சீசன் இல்லாததால் எலுமிச்சை விளைச்சல் குறைந்தளவிலே உள்ளது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகின்றனர். கடைகளில் கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்து வருகின்றனர். குறைந்தளவே விளைச்சல் உள்ளதால் கூடுதல் விலைக்கு வியாபாரிகள் தங்களிடம் கொள்முதல் செய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். சீசன் ஆரம்பிக்கும் போது இதே விலை தொடர்ந்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகாமல் விவசாய பணியினை தொடர்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு கூறினர்.