மயிலம் அக். 30: விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் பேரணியில் ரயில் நிலையங்கள் உள்ளது. இங்கிருந்து பல்வேறு ரயில் பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மயிலம் மற்றும் பேரணி ரயில்வே நிலையங்களில் சிறிய அளவில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் காலை 5:40 மணிக்கு பேரணி ரயில் நிலையத்தில் விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேசஞ்சர் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் மயிலம் ரயில் நிலையத்தில் தூத்துக்குடியில் இருந்து தாம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக ரயில் நிலையத்துக்கு வந்து சிக்னலில் ஏற்பட்ட கோளாறை விரைந்து சரி செய்தனர். இதனால் பேசஞ்சர் எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகவும், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாகவும் புறப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் சிறிது நேரம் அவதிப்பட்டனர்.
+
Advertisement
