புதுச்சேரி, ஜூலை 30: புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்தே செய்யக்கூடிய பகுதி நேர வேலை உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு செல்போன் மூலம் ஆன்லைனில் வரும் டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும், அதற்கு ஏற்றார் போல் பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்த நபர் டாஸ்க்குகளை செய்துள்ளார், பிறகு இதனை தொடர பணம் செலுத்த வேண்டும் என கூறியதால் அவர் ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 919 பணத்தை செலுத்தியுள்ளார். பின்னர் டாஸ்க்குகளை செய்து முடித்தபிறகு அவருக்கு வரவேண்டிய பணம் வரவில்லை. மர்ம நபர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த நபர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோன்று திலாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு சுங்க அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தோழி பார்சல் அனுப்பியுள்ளதாகவும் அதற்கு கட்டணம் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் பணத்தை செலுத்தியுள்ளார். பிறகு அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் போதை பொருள் இருப்பதாகவும் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டும் எனவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.