மயிலம், ஜூலை 30: மயிலம் அருகே ரேஷன் கடை பெண் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சென்னை வாலிபரை ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர். மயிலம் அடுத்துள்ள பெலாக்குப்பம் கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்த சரவணன் மனைவி சுகுணா(54) என்பவர் அவணம்பட்டு, தென்பசியார் ஆகிய 2 ரேஷன் கடையில் வேலை செய்து வருகிறார். அவணம்பட்டிலுள்ள ரேஷன் கடையில் தனது வேலையை முடித்துவிட்டு நேற்று பகல் ஒரு மணி அளவில் ரேஷன் பொருட்கள் விற்பனை வசூல் பணம் ரூ.9,240ஐ கைப்பையில் கொண்டு வந்துள்ளார். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தென்பசியார் பேருந்து நிறுத்தம் அருகே அவர் நடந்து சென்றபோது சென்னை, ஆழ்வார் திருநகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த காஜா மொய்தீன் மகன் ரஹிமான் (23) என்பவன் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி சுகுணா கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றுள்ளான். அதிர்ச்சி அடைந்த ரேஷன் கடை பெண் ஊழியர் உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே காவல் நிலையத்தில் இருந்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வழிப்பறி கொள்ளையனை துரத்தி சென்று கூட்டேரிபட்டு அருகே மடக்கி பிடித்தனர். மேலும் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையனை மயிலம் போலீசார் கைது செய்தனர். குற்றத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் குற்றவாளியிடம் இருந்த ரூபாய் 9,240 பணத்தை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement