சின்னசேலம், அக். 29: கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையில் 44 அடி நீர் நிரம்பியதால், வினாடிக்கு 400 கன அடி நீரை உபரிநீராக ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில், 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. இந்த கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்டகிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் நீர்த் தேக்கங்கள், அதன்மூலம் ஏரிகளில்நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது.
தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்குமுன் பருவமழை, தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து மூன்று போகமும் நெல் அறுவடை செய்தனர். கடந்த மாதம் வரை கோமுகி அணையின் நீர் மட்டம் 37 அடியாக இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக கோமுகி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென 44 அடியாக உயர்ந்தது. மேலும் கல்வராயன்மலை அடிவார ஆறுகளில் இருந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், தற்போது கோமுகி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்டது. இந்த நீரை விவசாயிகள் பயன்படுத்தி நாற்று விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
