Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பகுதிநேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ.2.11 லட்சம் ஆன்லைன் மோசடி

புதுச்சேரி, அக். 29: பகுதி நேர வேலை, ஆதார் அப்டேட் எனக்கூறி புதுச்சேரியில் 6 பேரிடம் ரூ.2.11 லட்சம் ஆன்லைனில் மோசடி செய்துள்ளனர். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஆண் நபர், ரூ.1 லட்சம் செலுத்தி பல்வேறு டாஸ்குகளை முடித்துள்ளார். அதன்பேரில் அவரது கணக்கில் லாபத்துடன் சேர்த்து அதிக தொகை காண்பித்துள்ளது. அதனை அவர் எடுக்க முயன்றும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

அதேபோல், தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆண் நபர், ஆன்லைனில் டேப்லட், பவர்பேங்க் ரூ.38,788க்கு ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். காந்திநகரை சேர்ந்த ஆண் நபர், தனது மகனுக்கு ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். இந்நிலையில் அவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, திருமண தகவல் மையத்தின் பிரதிநிதி என அறிமுகம் செய்து கொண்டு, வரனுக்காக பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் எனக்கூறி ரூ.2,400ஐ மோசடி செய்துள்ளார். இதேபோன்று, பெரியகாலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஆண் நபருக்கு ஆதார் அப்டேட் எனக்கூறி அவரது வாட்ஸ்அப்க்கு ஏபிகே பைல் வந்துள்ளது.

இதனை நம்பிய அவர், வங்கி, ஓடிபி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவேற்றம் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபரிடம் முத்ரா லோன் அதிகாரி பேசுவது போல் ரூ.10 லட்சம் கடனை குறைந்த வட்டிக்கு வழங்குவதாகவும், அதற்கு நடைமுறை கட்டணம் எனக்கூறியும் ரூ.3,750ஐ அபகரித்துள்ளார். கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர், வாட்ஸ்அப்பில் வந்த விளம்பரத்தை பார்த்து சிகரெட் லைட்டர்களை ஆன்லைனில் ரூ.16,200க்கு ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார். மேற்கண்ட பாதிக்கப்பட்ட 6 பேரும், ஆன்லைன் போர்ட்டல் மூலமாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.