Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் பணி சுமையால் மயங்கி விழுந்த வருவாய் ஆய்வாளர் திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனம், நவ. 27: எஸ்ஐஆர் பணியில் இருந்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி வருவாய் ஆய்வாளராக ஆனந்தன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் எஸ்ஐஆர் பணியில் சூப்பர் வைசராக பணியை கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பணியை முடித்துவிட்டு, மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்கு புறப்பட்டுள்ளார். தொடர்ந்து எஸ்ஐஆர் பணிக்காக இரவு 9 மணி அளவில் நகராட்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த போது, நேற்றுமுன்தினம் காலை முதல் இரவு வரை எஸ்ஐஆர் பணியில் இருந்து அதை முடித்துவிட்டு, பின்னர் இரவு நகராட்சிக்கு பணிக்கு வந்துள்ளார். தொடர்ந்து நேற்று காலை 5 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது. பணி சுமை காரணமாக அவருக்கு அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மயக்கம் வந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

நகராட்சி மற்றும் தாலுகா அலுவலக ஊழியர்கள் இரவு 12 முதல் 1 மணி வரை எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்வதாகவும், மீண்டும் மறுநாள் காலை 5 மணி அளவில் பணிகளை தொடர்வதாகவும் வேதனை தெரிவித்து வரும் நிலையில், எஸ்ஐஆர் பணி சுமையால் அதிகாரிகள் பலவேறு பாதிப்புக்கு உள்ளாகுவது தொடர் கதையாகவே உள்ளது. இதனால் எஸ்ஐஆர் பணிக்கு போதுமான அவகாசம் அளித்து இருந்தால், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது என சக ஊழியர்கள் கூறி வருகின்றனர்.