Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த அதிமுகவில் 3, 4வது அணி உருவாகிறதா? சி.வி சண்முகம் எம்பி பகீர் தகவல்

விழுப்புரம், நவ. 26: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த 3, 4வது அணி உருவானாலும் எங்களுக்கொன்றுமில்லை என்று சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டிபூசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சற்றும் இடம் கொடுக்காததால் அவரை வீழ்த்தும் முயற்சியில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், நீக்கப்பட்டவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

அதன்படி ஓபிஎஸ் வரும் டிசம்பர் 15ம்தேதி புதிய இயக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக கூறியிருக்கிறார். அதேபோல், கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற செங்கோட்டையன் த.வெ.கவில் இணையபோவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே அதிமுக பல பிரிவுகளாக உடைந்து கிடக்கும் நிலையில் தேர்தல் நேரத்தில் மேலும் பல அணிகள் உருவாகும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான சி.வி சண்முகம் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் முயற்சியில், ஓபிஎஸ் புதிய கட்சி தொடங்கவுள்ளது குறித்தும், செங்கோட்டையன் தவெகவில் இணைவதாக வரும் தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி சண்முகம், அதிமுகவை பற்றி மட்டும் கேளுங்கள். வெளியில் இருப்பவர்கள் அவர் அங்கு போகிறார், இங்கு போகிறார், 3வது அணி அமைக்கிறார், 4வது அணி அமைக்கிறார், உருளுகிறார், பெரளுகிறார் என எதுவாக இருந்தால் எங்களுக்கு என்ன?. என்று கூறிவிட்டு சென்றார். அதிமுகவில் 3, 4வது அணி என்று சி.வி சண்முகமே தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இதனால் நிச்சயம் அதிமுகவில் மேலும் பல அணிகள் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.