முஷ்ணம், அக். 26: கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை வடக்கு பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சரளா(39). இவருக்கும், அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வராசு மகன் ஆறுமுகம்(39) என்பவருக்கும் திருமணம் நடந்து மாமியார் வீட்டில் இருவரும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 நவம்பர் 18ம் தேதி கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் ஆறுமுகம் மது போதையில் இரும்பு கம்பியால் மனைவி சரளாவை தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து சோழத்தரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஆறுமுகம் 2 ஆண்டுகளாக தலைமறைவானார். இதையடுத்து சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமார் தலைமையில் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வ பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ஆறுமுகத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று போலீசார் தலைமறைவான ஆறுமுகத்தை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

