புவனகிரி, நவ. 25: புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் முதலே கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு, விட்டு பரவலாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக புவனகிரி அருகே உள்ள லால்புரம் கிராமத்தில் 100க்கு மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிநகர், சாராதா ராம்நகர், மேல்சொக்கநாதன் பேட்டை, அம்பேத்கர் நகர், காமராஜ் நகர் பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதாலும், வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் திமுகவின் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து அங்கிருந்த ஒரு சிறிய சாலையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் வீடுகள் சூழ்ந்த தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிந்தது. ஆனாலும் அவ்வப்போது விட்டு, விட்டு மழையும் பெய்ததால் தொடர்ந்து தண்ணீர் தேங்கும் அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது. மழைக்காலங்களில் அடிக்கடி தண்ணீர் தேங்குவதால் லால்புரம் கிராமத்திற்கு நிரந்தர வடிகால் வசதி தேவை என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.



