புதுச்சேரி, அக். 25: புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு ஆண் நபருக்கு, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் போன் செய்து பங்கு சந்தையில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை நம்பி அவர் ரூ.4 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார். பிறகு அவர் சம்பாதித்த பணம் மற்றும் முதலீடு செய்த பணம் ஆகியவற்றை திரும்ப பெற முயன்றபோது அவரது கணக்கு முடக்கப்பட்டுவிட்டது. இதனால் தான் போலி பங்கு சந்தையில் ஏமாற்றம் அடைந்ததை உணர்ந்த அவர் புதுவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் புதுவை உழவர்கரை பகுதியை சேர்ந்த ஆண் நபர் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். பிறகு வங்கியில் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என கூறியதால் அந்த நபர் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர் அபேஸ் செய்துவிட்டார். இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகார்களை பெற்று புதுவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

