விருத்தாசலம், அக். 25: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள பழைய விருத்தகிரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(67). இவருக்கும், இவரது சகோதரர் பன்னீர்செல்வம் என்பவருக்கும், விருத்தாசலம் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் இருவருக்கும் பதியப்படாத பாக பத்திரம் மூலம் பாகப்பிரிவினை செய்ததாகவும், இதனால் பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், நீதிமன்றம் மூலம் பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை பத்திரத்திற்கு பதிவு செய்வதற்கான முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும், என வாதாடினார்.
இதனால் கடந்த 2018ம் ஆண்டு கூடுதல் சார்பு நீதிமன்றம், விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு உரிய ஆவணங்களுடன் முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் நிர்ணயிக்க சம்மன் அனுப்பி இருந்தது. அதில் இருந்து
தொடர்ந்து 5 நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் இதுவரை முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. நேரில் ஆஜராக உத்தரவிட்டும் கோட்டாட்சியர் ஆஜராகவில்லை. இதன் காரணமாக கடந்த 15ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ், முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் நிர்ணயிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றாத விருத்தாசலம் கோட்டாட்சியருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா நீதிமன்றத்தில் ஆஜராகி, உரிய ஆவணங்களை தாக்கல் செய்தார். அவரது விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்தது.

