விழுப்புரம், ஆக. 22: விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்தவர் விமல்ராஜ் (24), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10.10.2021 அன்று மேலமேட்டில் உள்ள தேவேந்திரன் என்பவருடைய கடையில் சூப் குடிக்கச்சென்றார். அப்போது விமல்ராஜிக்கும், அங்கிருந்த தேவேந்திரனின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த வீரப்பன் தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரப்பன் விமல்ராஜை திட்டி வெட்டிக்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த விமல்ராஜ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வீரப்பன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, குற்றம் சாட்டப்பட்ட வீரப்பனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.