கடலூர், நவ. 21: கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரை கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி(70). இவர் வயிற்றுவலி காரணமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது மருத்துவர், அவரை ஸ்கேன் எடுக்கும்படி பரிந்துரை செய்துள்ளார். ஸ்கேன் எடுக்க வந்த இடத்தில் மாஸ்க் அணிந்து வந்த வாலிபர் ஒருவர், மூதாட்டிக்கு உதவி செய்வதாக கூறியுள்ளார் அப்போது அந்த வாலிபர் மூதாட்டியிடம் ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு நகை உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. நகை உள்ளிட்ட பொருட்களை என்னிடம் கொடுத்து வை, நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.அதனை நம்பி அந்த மூதாட்டி நகை மற்றும் பணத்தை அந்த வாலிபரிடம் கொடுத்துவிட்டு ஸ்கேன் எடுக்க சென்றுள்ளார்.
பின்னர் ஸ்கேன் எடுத்து வெளியே வந்து பார்த்தபோது அந்த வாலிபர் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கதறி அழுதுள்ளார். இது குறித்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.கடலூர் புதுநகர் போலீசார் வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அதில் மாஸ்க் அணிந்திருந்த வாலிபர், மூதாட்டியிடம் அரை பவுன் நகை மற்றும் ரூ.250 பணத்தை எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவனைக்கு வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

