புதுச்சேரி, நவ. 19: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூபாய் 23 கோடி செலவில் 25 பேருந்துகள் தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேருந்துகள் நகர்ப்புற வழித்தடங்களிலும், மீதமுள்ள 8 ஏசி பேருந்துகள் சுற்றுலா இடங்களை இணைக்கும் வழித்தடங்களிலும் ஓடுகிறது. மறைமலை அடிகள் சாலை தாவரவியல் பூங்கா எதிரேவுள்ள இ-பஸ் டிப்போ, இ-பஸ்கள், இ-ரிக்ஷாக்கள் இயக்கம், ஆட்டோ சவாரி செயலி ஆகியவற்றை கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்த மாதம் 27ம் தேதி துவக்கி வைத்தனர். புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 15 இடங்களில் ரூ.3.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்களை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் தகவல் அமைப்பு காட்சி, நகர வரைபடம் (நிலையான அல்லது எல்இடி காட்சி), ஒளிரும் விளம்பர பலகைகள், விளம்பர இடம், அனைவருக்கும் (மாற்றுத்திறனாளிகள்) அணுகக்கூடிய வசதி, வசதியான இருக்கை, யுஎஸ்பி தொலைபேசி சார்ஜிங், எல்இடி விளக்குகள், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நகரம் முழுவதும் வலம்வரும் மின்சார மினி பேருந்துகள், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மின்சார பேருந்துகளின் ஓட்டுநர்களை தனியார் நிறுவனமும், நடத்துநர்களை பிஆர்டிசி நிர்வாகமும் நியமித்துள்ளது. இந்நிலையில் மேற்கண்ட எலெக்ட்ரிக் மினிபேருந்துகளில் பிஆர்டிசி பரிசோதகர்கள் அதிரடியாக ஏறி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும், பஸ்களை ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்களில் கண்டிப்பாக நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என நடத்துநர் மற்றும் டிரைவர்களுக்கு உத்தரவிட்டனர்.


