Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கடலூரில் முதியோர் இல்லத்தில் இறந்த மூதாட்டி உடலை வலைதளம் மூலம் கண்டுபிடித்த மகன்

கடலூர், நவ. 19: கடலூர் முதுநகரில் கடந்த ஓராண்டாக முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த மூதாட்டி உயிரிழந்த நிலையில், சமூக வலைதளம் மூலம் அவரது மகனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் பகுதியில் ஒரு வருடத்துக்கு முன்பு மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்தார். பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் தமிழரசி என்றும், வயது 75 என்றும் தெரிவித்தார். வேறு எந்த தகவலையும் அவரால் கூறமுடியாத நிலையில், பொதுமக்கள் அவரை மீட்டு கடலூர் முதுநகரில் செயல்படும் இக்னைட் முதியோர் இல்லத்தில் சேர்த்தனர்.

இந்த நிலையில் வயது முதிர்வு காரணமாக மூதாட்டி தமிழரசி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7ம்தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு சிகிச்சை பலனின்றி 16ம்தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து மூதாட்டி மகனான சேத்தியாத்தோப்பு அருகே உள்ள சின்னநெற்குணம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவர், சமூக வலைதளம் மூலமாக தகவல் அறிந்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு வந்தார்.

பின்னர் காவல்துறை ஒப்புதல் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ ஒப்புதல் பெற்றார். இதையடுத்து மூதாட்டியின் உடல் அவரது மகனிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊரில் இறுதிச்சடங்கு செய்ய உடலை பெற்றுச் சென்றார். இதுதொடர்பாக பழனிவேல் கூறுகையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் திடீரென காணாமல் போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடி வந்தோம். இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் அவர் இறந்த தகவல் அறிந்து உடலை பெற வந்தோம். உடலை எங்கள் சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்ய உள்ளோம் என்றார்.