நெல்லிக்குப்பம், செப். 19: நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட முள்ளிகிராம்பட்டு பகுதியில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று அப்பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்றபோது, பழுத்துப் போன புழுக்கள் கூடு கட்டிய நிலையில் இருந்த அரிசியை வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நியாய விலை கடையில் பொருட்கள் வாங்க மறுத்து கடையை முற்றுகையிட்டு பூட்ட முயன்று, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்வேந்திரன் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக கடையில் உள்ள 75 பழுத்துப்போன அரிசி மூட்டைகளை திரும்ப பெற்றுக் கொண்டு, மீண்டும் நல்ல அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
+
Advertisement