செஞ்சி, அக்.18: செஞ்சி பகுதியில் ஆடுகளைக் கொன்று குவிப்பது கழுதைப்புலிகள்தான் என நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, திண்டிவனம், மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மர்ம விலங்கு ஆடுகளை கடித்து கொன்று வந்தது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும்புகை கிராமத்தில் 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கேமரா வைத்தும் கால் தடயங்களை சேகரித்தும் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் இரவு 11 மணிக்கு மேல் ஆனத்தூர் கிராமத்தில் வடிவேல் என்பவரின் ஆட்டு கொட்டகை அருகே கழுதைப்புலிகள் கூட்டமாக வந்துள்ளன. இதையடுத்து வடிவேலின் மகன்கள் தினேஷ், பிரவீன் ஆகியோர் கழுதைப்புலியை மொபைல் போனில் படம் எடுத்து வருவாய்த்துறையினருக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு மேல் ஆனத்தூர் மலையடிவராத்தில் கழுதைப்புலிகளை கிராம மக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த அவர்கள் வெடிகளை வெடிக்கச் செய்து அவற்றை விரட்டி அடித்துள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் ஆனத்தூர் கிராமத்திற்கு சென்று முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கழுதைப்புலிகளை பார்த்த பள்ளி மாணவனிடம் விசாரணை செய்தனர். மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கூண்டு அமைத்து அதனை பிடிக்க கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

