திண்டிவனம், செப். 17: பாமகவின் முகவரி மாற்றம் செய்து மோசடி செய்துள்ளதாக கவுரவ தலைவர் ஜி.கே. மணி கூறியுள்ளார். இது குறித்து அவர் தைலாபுரத்தில் நேற்று கூறியதாவது: செப்டம்பர் 17ம் தேதி இடஒதுக்கீடு போராட்டத்தில் மருத்துவர் ராமதாசுடன் போராடி உயிர் நீத்தவர்களுக்கு புகழஞ்சலி வீரவணக்கம் செலுத்தக்கூடிய நாள். எல்லோரும் அதனை செய்ய வேண்டும். ஒருவார தொடர் மறியல் காரணமாக தமிழ்நாடே ஸ்தம்பித்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம். உயிர் நீத்த தியாகிகளுக்கு தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி நாளை செலுத்த உள்ளார். தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை காட்டி அரசியலை திசை திருப்பவும் மக்களை நம்ப வைக்கவும் கடிதம் காட்டப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் திலக் தெரு என முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமகவின் நிரந்தரமான முகவரி 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை என்பதை திலக் தெருவிற்கு மாற்றப்பட்டது சூழ்ச்சியினால், கபட நாடகத்தினால் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் 2022ல் பாமகவின் தலைவராக பதவிஏற்று அவரது பதவி காலம் 28.05.2025 உடன் நிறைவு பெற்றது. அந்த பதவியில் இல்லாதவர் பாமகவின் பொதுக்குழு கூட்டத்ைத எப்படி கூட்ட முடியும். அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது. அதுதான் அமைப்பு விதி. மருத்துவர் ராமதாஸ்தான் பொதுக்குழு கூட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 30ம் தேதியிலிருந்து ராமதாஸ்தான் தலைவர்.
பாமகவின் தலைவர் ராமதாஸ் மட்டுமே. தலைவர் என சொல்லிக்கொண்டு கடிதம் எழுதுவது, பொதுச்செயலாளர் என்பது மோசடி தான். முகவரி தேனாம்பேட்டையிலிருந்து திலக் தெருவிற்கு மாற்றப்பட்டதும் மோசடி. எந்த நடவடிக்கையாக இருந்தாலும் நிறுவனர் ஒப்புதலோடுதான் செய்ய வேண்டும், கடிதத்தினை காட்டி திலக் தெருவிற்கு மாற்றியது மோசடி. அதன்மூலம் மக்களை திசை திருப்ப பாலு பார்க்கிறார். ராமதாஸ் இல்லாமல் எதுவும் இல்லை. ராமதாசை எந்த வகையிலும் கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. பாமகவுக்கு அங்கீகாரம் இல்லை.
அதனால் தேர்தல் ஆணையத்தை சந்தித்து மாம்பழம் சின்னத்தை வழங்க வலியுறுத்துவோம். அதன்மூலம் தேர்தல் ஆணையம் கொடுப்பார்கள். தலைவர் என்ற பெயரில் மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ராமதாசுக்கு சொந்தமானது. முகவரி மாற்றம்தான் குழப்பத்திற்கு காரணம். முகவரி மாற்றம் செய்யப்பட்டது ராமதாசுக்கு தெரியாது. பாமக ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்திற்கு விரைவில் பதில் வரும். பாமகவில் ராமதாசுடன், அன்புமணி சேர்ந்து நடப்பதுதான் நல்லது. எல்லாரும் ஏற்றுக் கொள்கிற தலைவராக ராமதாஸ் உள்ளார். பாமகவில் இருவரையும், நான் தான் பிளவுபடுத்தி வைத்துள்ளதாக கூறுகிறார்கள். ராமதாஸ் நான் சொன்னால் கேட்பாரா?. வாரிசு அரசியல் முன்னோர்காலத்தில் பேசப்பட்டது. வாரிசு அரசியல் என்பது திட்டமிட்டு திசை திருப்புவது. காந்திக்கு நிர்வாக குழு உறுப்பினர் பதவி தவிர, வேறு பதவிகள் வழங்கும் எண்ணமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.