ரெட்டிச்சாவடி, செப். 16: ரெட்டிச்சாவடி அடுத்த பெரியகங்கணாங்குப்பம் அருகே நேற்று முன்தினம் இதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் நாணமேடு தென்பெண்ணையாற்று கரையோரத்தில் மட்டிக்கல் பிடிக்க சென்றபோது, அருகில் நிலத்தில் இருந்த மரவள்ளி கிழங்கை பிடுங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த நிலத்தின் உரிமையாளர் இதுகுறித்து கேட்டபோது இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 13ம் தேதி இரவு நாணமேடு பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கத்தி, தடி போன்ற ஆயுதங்களுடன் பெரியகங்கணாங்குப்பம் கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த சிலரை தாக்கியுள்ளனர். இதில், இதே பகுதியை சேர்ந்த சஞ்சய் பிரசாத், பாலாஜி மற்றும் நாணமேடு பகுதியை சேர்ந்த விமல்ராஜ் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வாலிபர்களை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டிஎஸ்பி ரூபன்குமார், ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதுகுறித்து பாலாஜி என்பவர் அளித்த புகாரின்பேரில், நாணமேடு பகுதியை சேர்ந்த விமல்ராஜ்(23), கணேசன், கதிர், அன்புமணி, பாரதிதாசன் உள்பட 15 பேர் மீதும், விமல்ராஜ் அளித்த புகாரின்பேரில், பெரிய கங்கணாங்குப்பம் பகுதியை சேர்ந்த பாலாஜி, மதுபாலன், சஞ்சய் பிரசாத், சரண், புஷ்பராஜ் உள்பட 30 பேர் என மொத்தம் 45 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 2 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து இரு கிராம மக்களிடையே பதற்றம் நிலவுவதால், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 2வது நாளாக நாணமேடு, பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.