முஷ்ணம், செப். 16: முஷ்ணம் கடைவீதி பகுதியில் உள்ள அண்ணா சிலையில் அதிமுக சார்பில் புதிதாக அண்ணா சிலைக்கு வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இந்த சிலை ஏற்கனவே 1973ம் ஆண்டு அப்போதைய எம்ஜிஆர் திறந்து வைத்தார். அப்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இது பொதுவாக அமைக்கப்பட்டிருந்ததால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் அண்ணா, கலைஞர் பிறந்த நாட்களின்போது மரியாதை செலுத்தும் நடைமுறையில் இருந்தது.
தற்போது வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுகவினர் அண்ணா சிலை கீழே உள்ள பீடத்தில் இரட்டை இலை சின்னத்தை வரைந்ததாக கூறப்படுகிறது. இதை திமுகவினர் தட்டி கேட்கவே, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த வருவாய் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி அதிமுகவினரை எச்சரித்தனர். பின்னர் அண்ணா சிலை அடி பீடத்தில் வரையப்பட்டிருந்த அதிமுக சின்னத்தை அழித்தனர். இருப்பினும் அசம்பாவிதம் தடுக்க சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் விஜிகுமார் தலைமையில் போலீசார் பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நேற்று 2 கட்சியினரும் தனித்தனியாக சென்று பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.