புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி வீட்டுவசதி வாரிய அலுவலகம் அருகே பூட்டிய காரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு, அண்ணா நகரில் வீட்டு வசதி வாரியம் அலுவலகம் உள்ளது. இதன் அருகே நேற்று கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உருளையன்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களை ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிற காரில் இருந்து தூர்நாற்றம் வருவது தெரியவரவே, கார் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து கிழக்கு எஸ்பி ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் சம்பந்தப்பட்ட கார், புதுச்சேரி அண்ணா நகரை ஒட்டியுள்ள கே.சி. நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம் என்பவருக்கு சொந்தமானது என்பதும், கடந்த மாதம் இறுதியில் வேளாங்கண்ணி கொடியேற்ற விழாவுக்கு ராம் குடும்பத்துடன் மேற்கண்ட காரில் சென்றுவிட்டு வந்து காரை அந்த இடத்தில் நிறுத்திய நிலையில், கடந்த 15 நாட்களாக வண்டியை எடுக்காமல் இருந்தது தெரியவந்தது. பின்னர் தடயவியல் நிபுணர்கள் வரழைக்கப்பட்டு, காரின் வெளியே தடயங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில், கார் திறக்கப்பட்டது. தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பிறகு காரின் உள்ளே ஆய்வு செய்ததில் மதுபாட்டில், நொறுக்கு தீனிகள் இருந்த நிலையில் அதை கைப்பற்றினர் யாரோ, மர்மநபர் மதுஅருந்த காரை திறந்து உள்ளே சென்றிருக்கலாம் எனவும், பின்னர் போதையில் கதவை திறக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் சந்ேதகிக்கின்றனர். அதன்பேரில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே காருக்குள் பிணமாக கிடந்தவர் கோவிந்தசாலையைச் சேர்ந்த ஜெயமூர்த்தி என்பதும், மனநிலை பாதித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரது உறவினர்களை வரவழைத்த போலீசார், இறந்த நபரை உறுதிப்படுத்தி, சாவுக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.