கவர்னர், முதல்வர் கோரிக்கையை ஏற்று புதுச்சேரியில் ரூ.650 கோடிக்கு நான்கு வழிச்சாலை, புதிய மேம்பாலம் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு
புதுச்சேரி, அக். 14: புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்வர் கோரிக்கையை ஏற்று, நடேசன் நகரில் இருந்து முள்ளோடை சந்திப்பு வரை மேம்பாலமும், அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை நான்கு வரை சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம்- ராஜீவ் காந்தி சதுக்கம் வரையிலான மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி வைத்து பேசியதாவது: நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பதவியேற்றவுடன் உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டார். சிறந்த தொழில்நுட்பங்களையெல்லாம் பயன்படுத்தி இப்போது நம் நாட்டின் நெடுஞ்சாலை இணைப்பு உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளில் உருவாகும் குப்பைகளை மறுசுழற்சி செய்து சாலைகள் போடுவதற்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
ஏற்கனவே டெல்லி நகராட்சியில் குப்பைகளை பயன்படுத்தி சாலைகள் போட்டிருக்கிறோம். குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக், கண்ணாடிகள், உலோகங்களை பிரித்தெடுத்து சாலைகள் அமைக்க இருக்கிறோம். நம் நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சாலைகள் போடுவதற்காக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் மணல் எடுப்பதால் நீர் ஆதாரம் பாதுகாக்கப்படுகிறது. இது குடிநீர் பிரச்னையை தீர்க்கிறது. நீர் பற்றாக்குறையை போக்குகிறது. மத்திய நீர்வளத்துறை அமைச்சராக நான் இருந்தபோது, ஒரு மாநிலத்துக்கும் மற்ற மாநிலத்துக்கும் இடையே 24 வழக்குகள் நிலுவையில் இருந்தன. கலந்தாய்வு கூட்டம் நடத்தி 17 வழக்குகளில் தீர்வு ஏற்பட்டது. தமிழகத்துக்கும் கர்நாடகத்தும் இடையிலான நீர் பிரச்னை என்பது நீர் பற்றாக்குறை என்பதாக இல்லை.
இந்த இரண்டு மாநிலத்துக்கும் உள்ள நீர் பிரச்னையை தீர்க்க அரசியல் ரீதியாக உறுதியான முடிவு எடுக்கும் நிலைதான் வேண்டும். உலக அளவில் நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் 4வது இடத்தில் இருக்கிறது. இதை 3வது இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மொத்த உள்நாட்டு உற்பத்தி தொழில் நிறுவனங்களில் 22 முதல் 24% ஆகவும், சேவை பிரிவுகள் 50 முதல் 54% ஆகவும் உள்ளன. ஆனால், வேளாண் துறை மட்டும் 12% ஆக உள்ளது. அதனால் வேளாண்துறையை ஆற்றல் மற்றும் எரிசக்தி என்று பல்வேறு பிரிவாக மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம். தற்போது 30% பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. எதிர்காலம் என்பது ஹைட்ரஜன் அடிப்படையில் இயங்கும் என்ஜினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். ஆட்டோ மொபைல் உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2ம் இடத்திலும், இந்தியா 3ம் இடத்தில் இருக்கிறது. இது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் துறையாக இருக்கிறது. இப்பிரிவுதான் அதிகமான ஜிஎஸ்டி வரி வருவாயை கொடுப்பதாகவும், ஏற்றுமதிக்கான வாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கிறது.
தமிழகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இருந்து 50% ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தளவாடங்கள் செலவு தற்போது 10% ஆக உள்ளது. இதனை 6% ஆக குறைக்க வேண்டுமென்று சென்னை ஐஐடி, பெங்களூர் ஐஐஎம், கான்பூர் ஐஐடி ஆகியவை பரிந்துரை செய்துள்ளன. வரும் டிசம்பருக்குள் தளவாடங்கள் செலவை 9%ஆக குறைப்போம். இது நம்முடைய ஏற்றுமதியை ஒன்றரை மடங்கு உயர்த்தும். புதுச்சேரி நடேசன் நகரில் இருந்து மரப்பாலம் வரை 3 கி.மீ., தூரத்துக்கு 4 வழி மேம்பாலமும், அரியாங்குப்பத்திலிருந்து முள்ளோடை சந்திப்பு வரை 13.5 கி.மீ., தூரத்துக்கு நான்கு வழிச் சாலையும் ரூ.650 கோடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும். நடேசன் நகரில் இருந்து முள்ளோடை வரையிலான புதிய சாலை வழித்தடத்தை நிர்மாணிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை அமைச்சகம் தயாரிக்கும். வரும் 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான நெடுஞ்சாலையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவதற்கு சுமார் ரூ.2,200 கோடி செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் வழங்கப்படும். யூனியன் பிரதேசத்தில் சிறு பாலங்கள் கட்டுவதற்கு ரூ.100 கோடி செலவிடவும் அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.