கள்ளக்குறிச்சி, அக். 14: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்நிலையில் சின்னசேலம் அருகே உள்ள பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த பூவான் மகன் பாலு (47) என்பவர் அவரது தாய் அழகம்மாளுடன் மனு அளிக்க வந்தார். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனில் ஒரு லிட்டர் அளவுக்கு மண்ணெண்ணெய்யை மறைத்து எடுத்து வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த 1984ம் ஆண்டு ராயர்பாளையம் கிராமத்தில் பல்லக்காடு பகுதியில் விவசாய நிலம் வாங்கி பயிர் செய்து வருவதாகவும், அந்த விவசாய நிலத்துக்கு மண் பாதை இருந்து வந்ததாகவும், கடந்த ஒரு மாதமாக ராயர்பாளையத்தை சேர்ந்த ராமு என்பவர் அப்பாதையை மறித்து நிலத்தில் விவசாயம் செய்ய விடாமல் தடுப்பதாகவும், விவசாய நிலத்துக்கு நிரந்தரமாக நடைபாதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என்றார். பின்னர் தாய், மகன் இருவரையும் போலீசார் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகன் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வருகை தந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+
Advertisement