கடலூர், நவ. 13: குடிநீர் ஏற்றிச்சென்ற டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி மீது சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியானார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கம்மியம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியாகம் செய்வதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் குடிநீர் டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு உதவியாளராக கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் கம்மியம்பேட்டை பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக வாகனத்தை எடுத்துச் சென்றபோது திருப்பாதிரிப்புலியூர்- கம்மியம்பேட்டை செல்லும் சாலையில் வாகனத்தில் அமர்ந்திருந்த வேல்முருகன் திடீரென தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது குடிநீர் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
