உளுந்தூர்பேட்டை அருகே மக்காச்சோளம் நேரடி கொள்முதல் செய்ததில் மோசடி வியாபாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்
உளுந்தூர்பேட்டை, அக். 12: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் விவசாயம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல், மக்காச்சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, மஞ்சள் உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணி உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் மக்காச்சோளங்களை விவசாயிகள் உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வரும் நிலையில். சில கிராமங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதாகவும் உடனடியாக கையில் பணம் கொடுப்பதாகவும், ஆசைவார்த்தை கூறி மக்காச்சோளத்தை வாங்கி செல்கின்றனர். அதுபோல் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமக்கல் மாவட்டத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வந்த வியாபாரிகளிடம் பேசி சுமார் 200 மூட்டைக்கு மேல் மக்காச்சோளத்தை லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இருப்பினும் விவசாயிகளுக்கு எடை போடுவதிலும், மூட்டை குறைவாக இருப்பதாக சந்தேகம் வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இதே கிராமத்தில் லாரியில் நேரடியாக கொள்முதல் செய்வதற்காக அதே வியாபாரிகள் வந்தபோது சாக்கு முட்டையில் மக்காச்சோளத்தை கொட்டி ஏற்றும்போது முறைகேடுகள் செய்வதை விவசாயிகள் கண்டுபிடித்தனர். 100 மூட்டை அளவுக்கு மக்காச்சோளம் ஏற்றிவிட்டு 60 மூட்டை அளவுக்கு மட்டுமே பணத்தை கொடுத்துள்ளனர். சந்தேகமடைந்த விவசாயிகள் லாரியை ஏரியூரில் உள்ள ஒரு எடை மேடையில் வைத்து எடை போட்டபோது மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து எடைக்குண்டான பணம் வழங்கப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய பணத்தை பெற்றுத்தர காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.