குழந்தை பாக்கியத்துக்கு நாட்டு மருந்து தம்பதியிடம் ரூ.50 ஆயிரம் மோசடி போலி வைத்தியருக்கு போலீசார் வலை
மரக்காணம், அக். 12: மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் இவர்கள் சில ஆண்டுகளாக மருத்துவர்களிடம் வைத்தியம் பார்த்துள்ளனர். ஆனாலும் குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்கள் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி காலை சங்கீதா அதே பகுதியில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் விற்பனை செய்ய சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் ஒரு அடையாளம் தெரியாத நபர் காரில் வந்துள்ளார். அந்த நபர் தான் ஒரு நாட்டு வைத்தியர் என கூறியுள்ளார். மேலும் அவர் நான் பல வியாதிகளுக்கு நாட்டு மருந்து கொடுப்பேன் எனக்கூறி தன்னுடைய மருந்துகளின் பெருமைகளை எடுத்து கூறியுள்ளார்.
இதனை கேட்ட சங்கீதா அந்த நபரிடம் சென்று எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர் உன்னையும், உனது கணவரையும் பரிசோதித்த பிறகு தான் மருந்து கொடுக்கப்படும் எனக் கூறி சங்கீதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு மருந்தை கொடுத்து இந்த மருந்தை இருவரும் சாப்பிடுங்கள் அதன் பிறகு தான் குழந்தை பாக்கியத்திற்கான மருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார். வைத்தியர் கொடுத்த மருந்தை தம்பதியினர் சாப்பிட்டுள்ளனர். இவர்கள், மருந்தை சாப்பிட்ட சில துளி நேரங்களிலேயே மயங்கி உள்ளனர். அப்போது அந்த வைத்தியர் உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக மருந்து கொடுக்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் ஆகும் என கூறியுள்ளார். அப்போது இந்த தம்பதியினர் எங்களிடம் பணம் இல்லை, இதனால் எங்கள் நகையை வைத்து பணம் கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
உடனே அந்த தம்பதி நகையை வைத்து பணத்தை தயார்படுத்தி கொடுத்துள்ளனர். அப்போது அந்த வைத்தியர் உங்களுக்கு கொடுக்க வேண்டிய சில மருந்துகளை புதுவையில் தான் வாங்க வேண்டும். இதனால் என்னுடன் புதுவைக்கு வாருங்கள் எனக் கூறி அவரது காரிலேயே அழைத்து சென்றுள்ளார். இவர்கள் புதுவை மாநிலத்துக்கு சென்றவுடன் அங்குள்ள ஒரு தெருவுக்கு சென்று நீங்கள் காரில் இருந்து கீழே இறங்குங்கள், நான் எனது காரை சாலையோரம் நிறுத்தி விட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்டு இந்த தம்பதியினர் காரை விட்டு கீழே இறங்கியுள்ளனர். இவர்கள் கீழே இறங்கிய சில வினாடிகளில் மின்னல் வேகத்தில் அந்த கார் சென்றுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த புகழேந்தி, சங்கீதா தம்பதியினர் காருக்கு பின்னாடியே சில மீட்டர் தூரம் ஓடியுள்ளனர். ஆனால் மின்னல் வேகத்தில் சென்ற கார் மறைந்து விட்டதாக தெரிகிறது. தாங்கள் அடையாளம் தெரியாத போலி வைத்தியரிடம் பணத்தை இழந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் நேற்று மாலை இதுகுறித்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.