வானூர், செப்.12: வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே திண்டிவனம் புதுச்சேரி சாலையில் வி.கேணிப்பட்டு மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (53) என்பவர் கடந்த 2 வருடங்களாக டீ கடை நடத்தி வந்தார். இந்நிலையில் நாகராஜ் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் கடையை திறந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். டீ கடை எதிரே உள்ள டிரான்ஸ்பார்மர் உயர் மின்னழுத்தம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் டிரான்ஸ்பார்மரின் உள்ளே இருந்த ஆயில் அருகில் இருந்த டீ கடையில் பீய்ச்சி அடித்துள்ளது.
இதில் நாகராஜ் மீது ஆயில் தெறித்து விழுந்ததால் பால் கொதிக்க வைத்திருந்த கேஸ் ஸ்டவ்விலும் பட்டு நாகராஜ் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. தீப்பற்றியதால் நாகராஜ் அலறி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆரோவில் போலீசார் நாகராஜனை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.