கூகுள் மேப் பார்த்து போதை ஆசாமிகள் உற்சாக பயணம் கடலுக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு வீடியோ வைரல் போலீசார் எச்சரிக்கை
கடலூர், செப். 12: கூகுள்மேப் பார்த்து போதை ஆசாமிகள் ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர், புதுச்சேரி பகுதிகளுக்கு பெங்களூர், சென்னை போன்ற பல்வேறு நகரங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதன்படி, கடலூர் அருகே சொத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் இருந்து பங்கிப்பேட்டை கடற்கரை சாலை வழியாக சொகுசு கார் ஒன்று சென்றுள்ளது. சென்னையை சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் இந்த காரில் கூகுள் மேப் பார்த்து சென்றனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென கடல் பகுதிக்கு சென்று எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதில் காருக்குள் இருந்தவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறி கூச்சலிட்டனர்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவ கிராம மக்கள் அங்கு வந்து காரில் இருந்தவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் கடலில் மூழ்கி நின்ற காரை டிராக்டர் மூலம் கரை பகுதிக்கு இழுத்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், காரில் பயணித்தவர்கள் போதையில் இருந்ததும், இவர்கள் கூகுள் மேப் பார்த்து கடற்கரையோர மணற்பரப்பில் காரில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கடலுக்குள் கார் புகுந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பிய நிலையில், போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.