திண்டிவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் இறங்கிய பஸ் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
திண்டிவனம், செப். 12: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை அருகே நேற்று காலை விழுப்புரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை முண்டியம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டி சென்றார். வெளிமேடுபேட்டை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமாக சாலையில் இருந்து கீழே விவசாய நிலத்தில் பேருந்து இறங்கியுள்ளது. நிலத்தில் சகதியாக இருந்ததால் பேருந்து சேற்றில் சிக்கி கொண்டது. தகவல் அறிந்து வந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் பேருந்தில் பயணம் செய்த 60க்கும் மேற்பட்ட பயணிகளை பத்திரமாக மீட்டு மாற்று பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர். சேற்றில் சிக்கிய பேருந்தை மாலையில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மீட்டு பணிமனைக்கு கொண்டு சென்றனர்.