Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாலிபர் லாக்கப் மரண வழக்கு கொலை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கடலூர் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க உத்தரவு

கடலூர், டிச. 11: கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் 2015ல் சந்தேக வழக்கில் கைது செய்யப்பட்ட, தலித் வகுப்பை சேர்ந்த பட்டம்பாக்கம் சுப்பிரமணியம் மரணமடைந்த வழக்கில் சாட்சிகள் பெரும்பாலானோர், குற்றவாளிகள் பட்டியில் முதலில் இடம்பெற்றுள்ள ஆய்வாளர் ராஜா என்கிற ராஜராஜன் பணிபுரியும் வடலூர் காவல் நிலைய அதிகார வரம்புக்குள் வசிக்கின்றனர். ஒரு சிலர் அவரின்கீழ் பணிபுரியும் காவலர்கள், லாக்கப் மரணம் நடந்த நெய்வேலி டவுன் ஷிப்புக்கு அருகில் வடலூர் காவல் நிலையம் உள்ளதால் பாதிக்கப்பட்டோர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடும்.

எனவே அவரை இடமாற்றம் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட வேண்டுமென சுப்ரமணியத்தின் மனைவி ரேவதி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் நீதி பேராணை வழக்கு தொடர்ந்தார். மேலும், 304 பிரிவின்கீழ் இருந்த வழக்கை 302 (கொலை) மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவின்கீழ் மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் தரப்பட்டு கடலூர் நீதிமன்றத்தில் இப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. ஆனால் அப்பிரிவுகள் இணைக்கப்பட்டதை எதிர்த்து முதல் மற்றும் 2ம் எதிர்தரப்பு தொடுத்த வழக்கில் 302 பிரிவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றது. பணியிட மாற்ற பிரச்னையில் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ரேவதி மனுவின்பேரில் குற்றவாளி ராஜா இடமாற்றம் குறித்து 4 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க டிஜிபிக்கு 4.6.2024 அன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து 1.7.2024 அன்று வடலூர் காவல் நிலையத்திலிருந்து விழுப்புரம் காவல் சரகத்திற்கு காத்திருப்பு பட்டியலில் ராஜாவை இடமாற்றம் செய்து டிஐஜி ஆணை பிறப்பித்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் 302 வழங்கப்பட்ட தடையானையை நீக்கி வழக்கில் 302 போட்டது சரியென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கை விரைந்து நடத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் சந்திரசர்மா உத்தரவிட்டனர். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சுரேஷ், பிரசன்னா, திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகினர்.