புதுச்சேரி, செப். 11: புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மது போதையில் இருந்த நபர் தனது வீட்டருகே வந்த நல்லபாம்பை பிடிக்க முயன்ற போது, அது அவரது கையை கடித்தது. ஆத்திரம் அடைந்தவர் பாம்பை தோளில் போட்டு கொண்டு மக்களை அச்சுறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அமைந்திருக்கிறது புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம், இங்கு உள்ள தரியலதிப்பா கிராமத்தை சேர்ந்தவர் கொள்ளப்பள்ளி கொண்டா (50), இவர் மது போதையில் அவரது வீட்டருகே ஊர்ந்து வந்த நல்ல பாம்பை பிடிக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த பாம்பு அவரது கையை கடித்துள்ளது. ஆத்திரமடைந்த கொண்டா அவரை கடித்த பாம்பினை என்னையா? கடிக்கிறாய், எனக்கூறி பாம்பை பிடித்து, அதன் கழுத்தை நெறித்தபடி தனது கழுத்தில் மாலையாக சுற்றிக்கொண்டார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீது பாம்பை தூக்கி வீசுவது போல, அச்சுறுத்தும் வகையில் அங்கும், இங்கும் நடமாடினார். சிறிது நேரத்தில், பாம்பின் விஷம் தலைக்கேறியதில் வாயில் நுரைதள்ளியபடி பாம்பை கீழே வீசிவிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அப்பகுதி மக்கள், அவரை மீட்டு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இந்த வீடியோவானது தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.