கைது செய்யப்பட்ட சிஇஓ சிறையில் அடைப்பு போலி சைக்கிள் நிறுவன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் அமலாக்க துறை நடவடிக்கை
புதுச்சேரி, செப். 11: புதுச்சேரியில் போலி சைக்கிள் நிறுவனத்தின் மீது மோசடி புகார்கள் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள், ரூ.2.45 கோடி பணம் இருந்தது. அதனை தொடர்ந்து நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பிறகு இந்த வழக்கை அமலாக்கத்துறைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இவ்வழக்கில் முக்கிய நபர்கள் தலைமறைவாகி இருப்பதால், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லக்கூடாது என்பதற்காக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது.
இதையடுத்து புதுவை நிறுவனத்தின் பொறுப்பாளர் அஜய்முருகன் என்பவரை அமலாக்க துறையினர் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் எல்லா உண்மையையும் தெரிவித்ததாக தெரிகிறது. அதன் பேரில் சென்னையில் பதுங்கி இருந்த சைக்கிள் நிறுவனத்தின் கேரளாவை சேர்ந்த தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமத் என்பவரை அமலாக்க துறை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சைக்கிள் நிறுவனத்தின் மீது புதுவை போலீசார் வழக்கு பதிந்துள்ளதால் தலைமை செயல் அதிகாரி நிஷாத் அகமத்தை நேற்று புதுவை அழைத்து வந்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனிடையே இந்த வழக்கை புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்ற அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.