வடலூர், அக். 10: கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் நாகப்பசாமி நகர் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சங்கரன்(38). இவரது மனைவி கிருத்திகா(35). சங்கரன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி தனது சொந்த வீட்டுக்கு வந்த சங்கரன் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை கிருத்திகா எழுந்து வீட்டின் வெளியே பார்த்த போது, சாமி அறையில் வைத்திருந்த மண் உண்டியல் தெருவில் சில்லறை காசுகளுடன் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று சாமி அறையில் பார்த்தபோது, அங்கு வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைக்காமல் நூதன முறையில் வீட்டிற்குள் வந்து திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து கிருத்திகா கொடுத்த புகாரின் பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
+
Advertisement